செந்தமிழ்சிற்பிகள்

'சொல்லின் செல்வர்' இரா. பி. சே. (1896-1961)

'சொல்லின் செல்வர்' இரா. பி. சே. (1896-1961)

அறிமுகம்

ரா.பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.

சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2-ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்குச் சேது என்று பெயர் சூட்டினர். இரா.பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த 'இரா' என்பது இராசவல்லிபுரத்தையும் 'பி' என்பது 'பிறவிப்பெருமான்பிள்ளை' அவர்களையும் குறிப்பன.

1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப் பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

சேதுப்பிள்ளையின் தமிழின்பம்என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு 1955-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளைஎன்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.

இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் "திருவள்ளுவர் நூல் நயம்" என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, "தமிழகம் ஊரும் பேரும்" என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்,

சிலப்பதிகார நூல்நயம்

தமிழின்பம்

தமிழ்நாட்டு நவமணிகள்

தமிழ் வீரம்

தமிழ் விருந்து

வேலும் வில்லும்

வேலின் வெற்றி

வழிவழி வள்ளுவர்

ஆற்றங்கரையினிலே

தமிழ்க் கவிதைக் களஞ்சியம்

செஞ்சொற் கவிக்கோவை

பாரதியார் இன்கவித்திரட்டு

போன்ற நூல்கள் இவரின் படைப்புகளாகும்.